ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் - 2
திருமங்கையாழ்வார், திருவாலி திருநகரி என்கிற வைணவ திவ்யதேசத்தின் அருகில், திருக்குறையலூரில், கள்ளர் குடியில் அவதரித்தவர். இவருக்கு நீலன், பரகாலன், கலியன் என்ற திருநாமங்களும் உண்டு. இவரது வீர தீர பராக்கிரமத்தை அறிந்த சோழராஜன் இவரை தனது தளபதியாக்கி, பின்னர் திருமங்கை நாட்டுக்கு அரசராக முடிசூட்டினான்.
பின்னாளில், பேரழகும் நற்குணமும் கொண்ட குமுதவல்லியின் மேல் மையல் கொண்டு அவளையே திருமணம் செய்யும் பொருட்டு வைணவராகி, அடியார்க்கும், வைகுந்தனுக்கும் தொண்டு செய்து, அவளது அன்புக்கு உகந்தவராகி அவளை மணமுடித்தார். ஒரு சமயம் அனைத்தும் இழந்து ஏழையான அவர், அடியார்க்கு தொடர்ந்து தொண்டு செய்ய வேண்டி, வழிப்பறி செய்து வந்தார்.
ஒரு முறை, திருநறையூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, பல வகை அணிகலன்களுடன் மாறுவேடம் பூண்டு ஆழ்வாரின் பாதையில் குறுக்கிட்டார். ஆழ்வாரோ பெருமானிடமே களவு செய்து, கைப்பற்றியதை ஒரு மூட்டையாகக் கட்டி தூக்க முற்பட்டபோது அது மலையளவு கனக்கவே, "நீர் யார்? என்ன மாயமந்திரம் செய்தீர்" என்று பெருமானையே அச்சுறுத்தினார். பெருமான் அவர்க்கு தன் சுயரூபம் காட்டி, அவரை ஆட்கொள்ளவே, அன்றிலிருந்து திருமங்கையாழ்வார் உலக பந்தத்தை விட்டொழிந்தார். அதன் பின், வைகுண்டநாதன் மேல் அவருக்கிருந்த அதி தீவிர அன்பின்/பக்தியின் வெளிப்பாடாக, பல தெய்வீகப் பாசுரங்களை இயற்றியது நாம் அறிந்ததே!
அவரது பெரிய திருமொழியிலிருந்து இரு அழகிய எளிய பாசுரங்கள் அவர் உலகப்பற்றை விட்டொழித்ததை கூறுகின்றன.
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருளின்பமென விரண்டும்
இறுத்தேன் * ஐம்புலன்கட் கடனாயின வாயிலொட்டி
யறுத்தேன் * ஆர்வச் செற்றமவை தன்னை மனத்தகற்றி
வெறுத்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!
தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே.
அடுத்து வரும் பாசுரத்தில் பெருமாள் மேல் அவருக்கிருந்த, பிரவாகமாய் பொங்கியெழும் அன்பை/பக்தியை உணரலாம்!
திருவுக்கும் திருவாகிய செல்வா!
தெய்வத்துக்கரசரே! செய்யகண்ணா!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!
உலகுண்ட வொருவா திருமார்பா!
ஒருவற் காற்றியுய்யும் வகையன்றால்
உடனின்னறவ ரென்னுள் புகுந்து* ஒழியா
தருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்ற வெம்மானே!
********************************************************
ஆழ்வார்களில் தலையானவர் எனக் கருதப்படுவதால் 'நம் ஆழ்வார்' எனப் பெயர் பெற்ற இவர் வேளாள வம்சத்தில் அவதரித்த வைணவ வித்து! இவரது பாசுரங்களில் பக்திப் பேருவகையும் (ecstasy through devotion) ஸ்ரீவைகுண்டநாதன் மேல் நம்மாழ்வருக்கு இருந்த கடலை ஒத்த பேரன்பும் காணப்படுகின்றன. ஒரு சமயம், மகாவிஷ்ணு அலைமகள் சமேதராய், கருடவாஹன ரூபராய் நம்மாழ்வாரை அருள் பாலிக்க எதிர் வந்து நிற்க, 'கருமுகில் தாமரைக்காடு பூத்து நீடிரு சுடரிரு புறத்தேந்தி ஏடவீழ் திருவொடும் பொலிய ஓர் செம்பொற்குன்றின் மேல் வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றிய' பெருமாளின் திருவடி பணிந்து ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தார்.
அதோடு நில்லாமல், பாற்கடல் வாழ் அரங்கன், 108 வைணவத் திருப்பதிகளில் கொண்ட திருக்கோலங்களோடு காட்சியளித்தது நம்மாழ்வார் ஒருவருக்கே!!! நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரங்களையும் முறையே, பிரபந்தத்தில் வரும் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி ஆகியவற்றில் அமைந்த திவ்யப் பாசுரங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அவரது பாசுரங்கள் சிலவற்றை காணலாம்.
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.
பதவுரை:
உலகில் வாழ்கின்ற காலம் முழுதும் எம்பெருமான் அவனருகில் இருந்து, குறைவிலாத தொண்டு நாம் செய்ய வேண்டும்! இனிய ஒலியுடன் விழும் அருவிகள் நிறைந்த திருவேங்கடமலையில் வீற்றிருக்கும், அழகிய தீபத்தை ஒத்த எம்பெருமானே என் தந்தையாவான்!
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!
பதவுரை:
ஒரு முறை குன்றை குடையாக ஏந்தி, ஆயர்குலத்தவரை பெருமழை, காற்றிலிருந்து காத்தவனும், வாமனனாக தன் திருவடிகளால் உலகை அளந்தவனுமான திருவேங்கடம் வாழ் பெம்மானை அடைந்து இடைவிடாது வேண்டினால், நம் அல்லல்களும் பாவங்களும் நம்மை விட்டு ஒழிந்திடுமே!
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே!
பதவுரை:
திருவேங்கடம் வாழ் பெருமான் தனது தாமரை மலரை ஒத்த திருவடிகளை ஒவ்வொரு நாளும் வாயால் போற்றியும் மனத்தினால் துதிக்கவும் செய்யும் அடியார்களை, முதுமை, பிறப்பு, இறப்பு ஆகிவற்றிலிருந்து நிரந்தர விடுதலை அளித்து தன்னோடு ஏற்றுக் கொள்வான்!
உலகம் உண்ட பெருவாயா! உலப்பு இல் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
குலதொல் அடியேன் உன் பாதம் கூடும் ஆறு கூறாயே!
பதவுரை:
ஒரு சமயம் ஆயர்பாடிக் கண்ணனாய், உலகங்களை உன் திருவாயில் அடக்கியவனே! ஒப்பிலா புகழ் கொண்ட பெருமானே! சோதியால் சூழப்பட்டது போல் ஒளி மிகுந்த திருமேனி கொண்டவனே! உயர்ந்தவனே! என் உயிருக்கு ஒப்பானவனே! இவ்வுலகை காத்து நிற்கும் திருவேங்கடமுடையானே! அடியேன் உன் திருப்பாதங்களை வந்தடையும் வழிமுறையைக் கூறுவாயாக!
என்றென்றும் அன்புடன்
பாலா
1 மறுமொழிகள்:
நம்மாழ்வாரையும் திருமங்கையாழ்வாரையும் ஒரே பதிவில் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பாசுரச் சுவையில் இருவர் பாசுரங்களும் ஒன்றையொன்று மிஞ்சப் போட்டியிடும் என்று படித்திருக்கிறேன்.
Post a Comment